பருவமழை பாதிப்பால் 4 பேர் உயிரிழப்பு: ஈரோடு ஆட்சியர் தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஈரோடு: பருவமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் 137 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வட கிழக்கு பருவ மழை காரணமாக மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

4 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 36 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் அன்னை சத்யா நகர், மல்லி நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க, தற்காலிகமாக பிச்சைக்காரன் பள்ளத்தை தூர்வாரும் பணி நடக்கிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநகராட்சி சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோபி பகுதியில் ஆதிதிராவிட இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக, தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் சார்பில் காவல்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் முன்னிலையில் இரு தரப்பினரிடையே விசாரணை நடக்கவுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 மற்றும் 50 வயதான இரண்டு யானைகள்உயிரிழந்துள்ளன. வனப் பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் சட்ட விரோதமாக, மின்வேலி அமைத்திருந்தால் அவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in