Published : 01 Dec 2023 04:14 AM
Last Updated : 01 Dec 2023 04:14 AM

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழு விரைவு

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.

அரக்கோணம்: பருவ மழை பெய்து வருவதையொட்டி மீட்புப்பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படை மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய மீட்புப் படை வீரர்களை பருவ மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மீட்புப் பணி மேற்கொள்ள தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கேட்டுக்கொண்டது.

அதன் பேரில் 25 பேர் கொண்ட 4 குழுக்களை அனுப்ப கமாண்டர் அகிலேஷ் குமார் உத்தரவிட்டதன் பேரில், துணை கமாண்டர்கள் சங்கரபாண்டியன், சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் 2 குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்துக்கும், 2 குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்துக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் ஏற்கெனவே ஒரு குழுவினர் முகாமிட்டுள்ள நிலையில், தற்போது கூடுதாலக 2 மாவட்டங்களுக்கு 2 குழுக்கள் விரைந்துள்ளனர்.

பேரிடர் மீட்புப்படை வீரர்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், கயிறு, நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மருத்துவ முதலுதவி கருவிகள், ஆகியவற்றை கொண்டு சென்றனர். மாநில பேரிடர் மேலாண்மை துறை அவசர கால கட்டுப்பாட்டு மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அரக்கோணம் படைப்பிரிவு வளாகத்திலும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x