தமிழகம் நோக்கி நகரும் புயல் முதல் Exit Polls முடிவுகள் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.30, 2023

தமிழகம் நோக்கி நகரும் புயல் முதல் Exit Polls முடிவுகள் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.30, 2023
Updated on
3 min read

தமிழகம் நோக்கி நகரும் புயல்: மிக கனமழை எச்சரிக்கை: தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ‘மிக்ஜாம்’ என்ற புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும். அதே சமயத்தில் வரும் 2-ஆம் தேதி புயல் உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் தாமதமாக 3-ஆம் தேதி உருவாகும் எனவும் மிக்ஜாம் என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்” என்றார்.

டிசம்பர் 1-ல் கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 2-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும். டிசம்பர் 4-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கனமழையை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்: சென்னை மாநகரில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்ட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், சாலைகள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட தேவையான மின் மோட்டார்கள் அமைத்திடவும், மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடவும், அப்பகுதியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதுகாக்கப்பட்ட சென்னை”: “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாவிட்டால் சென்னை இந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்டிருக்காது. மழை பாதிப்பு என்பது ஓரிரு இடங்களில் இருக்கத்தான் செய்யும். சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எல்லா மக்கள் பிரதிநிதிகளும் விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் 145 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் நீர் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அத்தியாவசியத் தேவை இல்லாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான பொன்முடி: சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக வியாழக்கிழமை காலை அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜரானார். இதைத் தொடர்ந்து அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?: தெலங்கானா மாநிலத் தேர்தல் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், 5 மாநில பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, ராஜஸ்தானில் பாஜக வெற்றி விளிம்பில் நிற்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முந்துகிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மிசோரத்தில் தொங்கு அரசு அமையும் என்றும், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

நீதிமன்ற தடையை மீறப்போவதில்லை: ஓபிஎஸ் உத்தரவாதம்: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து பிறப்பித்துள்ள உத்தரவைப் பின்பற்றி வருவதாகவும், உத்தரவை மீறப்போவதில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தேங்கிய மழைநீர் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்: "கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மழைநீர் வடிகால் பணிகள் - அண்ணாமலை கேள்வி: சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கவலை: “காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல நடந்த சதியில் இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும் கவலைக்குரிய விஷயம், அது அரசின் கொள்கைகளுக்கு முரணானது” என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிப்பு: “பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான மத்தியஸ்தர்களின் தொடர் செயல்பாட்டு முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களின்படி, ஹமாஸ் உடனான போர் இடைநிறுத்தம் தொடர்கிறது என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு நாளைக்கு இது தொடரும் என்ற காலக்கெடு கூறிப்பிடப்படவில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in