

கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக கோவை உள்ளது. மாநகரில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை ஆகிய 6 பிரதான சாலைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரத்தை ஒப்பிடும் போது, தற்போது வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து விட்டது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல்கள், விபத்துகளும் அதிகரித்துள்ளன. போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க, மாநகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், காவலர் மின்னணு கண் என்ற செயலியின் மூலமும், காவலர்களால் நேரடி தணிக்கை நடத்தப்பட்டு விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும் போது,‘‘மாநகரில் விபத்து தொடர்பான புள்ளி விவர அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் சுயாதீனமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உள்ளது. இதை குறைக்க காவல்துறையினர் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவை மாநகரில் கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 53 இருசக்கர வாகன ஓட்டிகள், ‘செல்ஃப் ஆக்சிடென்ட்ஸ்’ எனப்படும் சுய தவறுகளால் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதுவே, நடப்பாண்டு மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் 43 இருசக்கர வாகன ஓட்டிகள் ‘செல்ஃப் ஆக்சிடென்ட்ஸ்’ முறையில் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 57 இருசக்கர வாகன ஓட்டிகளும், நடப்பாண்டு 34 இருசக்கர வாகன ஓட்டிகளும் ‘செல்ஃப் ஆக்சிடென்ட்ஸ்’ முறையில் விபத்துகளில் சிக்கி காயமடைந்துள்ளனர். சாலை விபத்துகளை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
மாநகர காவல் துறையினர் கூறும்போது, ‘‘இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தலைக்கவசத்தை சரியான முறையில் அணிந்து, ‘பின்’களை சரியாக பொருத்திக் கொள்ள வேண்டும். சரியாக பொருத்தாவிட்டால் வாகன ஓட்டி கீழே விழுவதற்கு முன்னர், தலைக்கவசம் தனியாக கழன்று விழுந்து விடும். மித வேகம் மிக நன்று என்ற அடிப்படையில், சாலைகளில் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வேக அளவை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும்.
அதீத வேகம் மற்றும் மது போதையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் போது, முகப்பு விளக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும். வேகத்தடைகள் இருந்தாலோ, சாலைகளில் குழிகள் காணப்பட்டாலோ மெதுவாக இருசக்கர வாகனத்தை ஓட்டி கடக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் பெரிய நபர்கள் இருவருக்கு மேல் செல்வதை தவிர்க்க வேண்டும். சாலை போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்’’ என்றனர்.
மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் ராஜராஜன் கூறும்போது,‘‘சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். செல்ஃப் ஆக்சிடென்ட் முறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழப்பது தொடர்ந்து பதிவாகி வருகிறது.
இதைத் தடுக்க விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் சாலை விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அபராதம் விதித்தல் உள்ள நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். காவல் துறையினரின் தொடர் நடவடிக்கையால் உயிரிழப்பு விபத்துகள் எண்ணிக்கை கடந்தாண்டை விட நடப்பாண்டு கணிசமாக குறைந்துள்ளது’’ என்றார்.