Published : 30 Nov 2023 08:26 AM
Last Updated : 30 Nov 2023 08:26 AM

சென்னை, புறநகரில் கொட்டித் தீர்த்த கனமழை - மழைநீர் தேங்கியதால் சாலைகளில் நெரிசல்

படங்கள்: ம.பிரபு / எம்.முத்துகணேஷ் / எஸ்.சத்தியசீலன்

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் இலங்கை அருகே நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

நேற்று காலை முதலே தென் சென்னை மற்றும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் புழல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. மாநகரப் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு 8 மணிக்கு மேலும் மழை நீடித்தது.

இதனால் மாநகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மாலை நேரத்தில் கொட்டிய மழையால், பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சோழிங்கநல்லூர்-தாம்பரம் சாலை, துரைப்பாக்கம் சாலை, தாம்பரம்-மதுரவாயல் சாலை போன்றவற்றில் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட நெரிசலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

தியாகராய நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கே.கே. நகர் பர்னபி சாலை, அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர். கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன. அதேபோல, 5 விமானங்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டது.

சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்கப் பாலம் மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், துரைசாமி பாலம், அரங்கநாதன் பகுதிகளில் உள்ள சுரங்கப் பாலங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப் பாலம் மூடப்பட்டது. நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ., கத்திவாக்கம், மதுரவாயல், புழலில் 10 செ.மீ., கொளத்தூர், அம்பத்தூரில் 14 செ.மீ., அண்ணா நகர், திரு.வி.க. நகரில் 12 செ.மீ., கோடம்பாக்கத்தில் 11 செ.மீ. மழை பதிவானது.

3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கனமழை காரணமாக இன்று (நவ. 30) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதேபோல, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மின்சார ரயில்கள் தாமதம்: இதற்கிடையில், கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இரு மார்க்கங்களிலும் மின்சார ரயில்கள் நேற்று மாலை முதல் மெதுவாக இயக்கப்பட்டன. குறிப்பாக, ஆவடி அருகே ரயில் தண்டவாளம் மழை நீரில் மூழ்கியது. மேலும், ஆவடி மற்றும் அண்ணனூர் ரயில் நிலையங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் இரு மார்க்கங்களிலும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மின்சார ரயில்கள் வில்லிவாக்கம் - பட்டாபிராம் இடையே விரைவுப் பாதையில் மெதுவாக இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் மார்க்கத்தில் ஒரு மணி நேரம் தாமதமாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல இயங்கின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x