

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 100 மாணவர் தங்கும் வசதியுடன் ரூ.2.16 கோடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன் ரூ.2.77 கோடியில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதி, புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் ரூ.2.12 கோடியில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.3.34 கோடியில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன் ரூ.2.15 கோடியில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதி என மொத்தம் ரூ.12.54 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 விடுதி கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், மதுரை மாவட்டம் - கோவிலாங்குளம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் – தெப்பத்துப்பட்டி ஆகிய இடங்களிலுள்ள 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் நபார்டு நிதியுதவியுடன் ரூ.6 கோடியே 51 லட்சத்து 70 ஆயிரம் செலவில் அறிவியல் ஆய்வகங்கள், கூடுதல் கழிப்பறைகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர், ஆணையர்கள் அணில் மேஷ்ராம், வா.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.