Published : 30 Nov 2023 06:01 AM
Last Updated : 30 Nov 2023 06:01 AM
சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது தொடர்பான கோரிக்கை முதல்வர் வாயிலாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளை, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம், ஆசிய புலம்பெயர்வோர் மற்றும் புலம் பெயரும் பெண்கள் அமைப்பு ஆகியன சார்பில் சென்னை, எழும்பூரில் உள்ள விடுதியில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: கலந்துரையாடலில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு சார்பிலான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சர்வதேச சட்டங்களை ஏற்பது தொடர்பான கோரிக்கை முதல்வர் வாயிலாக மத்திய அரசிடம் எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
இதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் பேசும்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தலுக்கு அடிப்படை மனிதநேயம் இல்லாததே காரணம். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசும்போது வீட்டுவேலை தொழிலுக்காக செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளியே சொல்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதில்லை. இதற்காக அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது என்றார்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இணை இயக்குநர் கே.ரமேஷ் பேசும்போது, “வெளிநாடு செல்வோருக்கு தக்க அறிவுறுத்தல் வழங்கி, தகுதி வாய்ந்த நபர் மூலமாகவே வெளிநாடு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக 7 உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே சென்னையில் 1 மையம் உள்ளது. இதுதவிர்த்து, அதிகளவில் வெளிநாடு செல்வோர் உள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பிரிடெப்பார்ட்சர் ஓரியன்டேசன் சென்டர் என்னும் மையங்கள் ஜனவரிக்குள் ஏற்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் வளர்மதி பேசும்போது, “வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பெரியளவில் பேசப்படுவதில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சர்வதேச அளவிலான சட்டங்களை மத்திய அரசு ஏற்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கிளாராம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT