சென்னை தரமணியில் தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் மரணம்

சென்னை தரமணியில் தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் மரணம்
Updated on
1 min read

சென்னை தரமணியில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவால் விமர்சித்து தாக்கியதால் தீக்குளித்த இளைஞர் மணிகண்டன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மரணமடைந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் அவருடன் அவரது தாயாரும் சகோதரியும் உடன் இருந்தனர்.

இன்று காலை முதலே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படிருந்த நிலையில், மணிகண்டன் உயிர் பிரிந்தது.

காவலர் சஸ்பெண்ட்:

இதற்கிடையில், மணிகண்டனை திட்டிய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் இன்று காலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போக்குவரத்து போலீஸார் தாக்கியதால் தீக்குளித்த கார் ஓட்டுநர் விவகாரத்தில், உதவி ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மீது தரமணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

சென்னை தாம்பரத்தில் வாடகை கார் ஓட்டுநராக இருப்பவர் மணிகண்டன்(24). கடந்த 24-ம் தேதி பழைய மகாபலிபுரம் சாலையில் தரமணி அருகே சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து போலீஸார் அவரது காரை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருந்தபோதும், சீட்பெல்ட் அணியவில்லை என்று அபராதம் வசூலித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், போலீஸார் சரியாக பணிசெய்கிறார்களா என்பதைப் பார்க்க, போலீஸார் வாகன சோதனை செய்ததை சிறிது தூரம் தள்ளியிருந்து தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதைப்பார்த்த போலீஸார் மணிகண்டனைப் பிடித்து, அருகே இருந்த போலீஸ் பூத்துக்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

செல்போனில் பதிவு

போலீஸார் தாக்கியதால் அவமானம் அடைந்த மணிகண்டன், தனக்கு நேர்ந்த சம்பவங்களை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, நண்பர்களுக்கு அனுப்பி விட்டு, காரில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு, தன்னைத் தாக்கிய போலீஸார் முன்பே தீக்குளித்துக் கொண்டார்.

உடலில் எரிந்த தீயுடன் அலறிய மணிகண்டனை அருகே இருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு நேரில் சென்று மணிகண்டனுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மணிகண்டன் உயிர் பிரிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in