Published : 12 Jan 2018 08:27 AM
Last Updated : 12 Jan 2018 08:27 AM

31 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி40: 28 மணி நேர கவுன்ட்-டவுன் தொடங்கியது

கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று தொடங்கியது.

நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், பூமியில் உள்ள இயற்கை வளங்களை ஆராய்தல், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமின்றி, வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

எடை குறைந்த செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும், எடை அதிகம் உள்ள செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும் இஸ்ரோ விண்ணில் ஏவிவருகிறது. அந்த வகையில், 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது இஸ்ரோவின் 42-வது பிஎஸ்எல்வி ரக ராக்கெட் ஆகும்.

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து சரியாக இன்று காலை 9.29 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப் பாயும். 2018-ல் இஸ்ரோ அனுப்பும் முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வெப்ப தகடு கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்தது. இந்த சூழலில், தற்போதைய பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

31 செயற்கைக் கோள்கள்

இன்று விண்ணில் செலுத்தப்படும் 31 செயற்கைக் கோள்களில், கார்ட்டோசாட்-2, ஒரு மைக்ரோ செயற்கைக் கோள், ஒரு நானோ செயற்கைக் கோள் ஆகிய மூன்றும் இந்தியாவைச் சேர்ந்தவை. 3 மைக்ரோ செயற்கைக் கோள்கள், 25 நானோ செயற்கைக் கோள்கள் ஆகியவை கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்தவை. இந்திய செயற்கைக் கோளான ‘கார்ட்டோசாட்-2’ புவி கண்காணிப்பு பணிக்காக ஏவப்படுகிறது. இது நில வரைபடம் தயாரித்தல், கடலோர நிலங்களின் பயன்பாடு, ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதற்காக துல்லியமாக படம் எடுக்கும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x