சென்னையில் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு மழை விடுமுறை!

சென்னையில் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு மழை விடுமுறை!
Updated on
1 min read

சென்னை: சென்னையில் புதன்கிழமை தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், நாளை (நவ.30 - வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில், புதன்கிழமை காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், தொடர்மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னையின் மீது மேககுவியல்கள் அதிகமாக காணப்படுவதால், இன்று இரவு 10 மணி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.30) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பணிமுடிந்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். நகரின் பல்வேறு முக்கியச் சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் உள்ள பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கனமழை பெய்து வருவதால், பிற மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in