

மரபணு மாற்றுப் பயிர்கள் சோதனை முறையில் சாகுபடி செய்வதற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மரபணு மாற்றுப் பயிர்களை சோதனை அடிப்படையில் அனுமதிக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, அதற்கான மரபணு மாற்று விதை கொண்டுவரும் களப்பணிக்கு உத்தரவிட்டுள்ளது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரி சாகுபடிக்கு அனுதி அளித்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. மரபணு பயிர்கள் தொடர்பாக அப்போதைய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பெங்களூருவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியபோது, மரபணு பயிர்களினால் ஏற்படும் எதிர்விளைவுகளை சுட்டிக்காட்டி பி.டி.கத்தரிக்கு அனுதி தரக்கூடாது என்று கோரிக்கை அட்டைகளை ஏந்தி எதிர்ப்பை மதிமுக பதிவு செய்தது. பிப்ரவரி 10, 2010-ல் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், பி.டி.கத்தரியை வர்த்தக பயன்பாட்டிற்காக பயிரிடுவதை நிறுத்தி வைக்க அரசு தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
பிலிப்பைன்ஸ் தீவுகளில் சிடியோ கல்லாங்க் என்னும் கிராமத்தில் அரசு ஆதரவுடன் பி.டி.மக்காச் சோளம் விதைக்கப்பட்டது. பயிரின் பூக்கும் பருவத்திலேயே அதன் பாதிப்புத் தெரிந்தது. வயலில் வேலை செய்தவர்களுக்கும் அருகில் வசித்தவர்களுக்கும் காய்ச்சலும், முக வீக்கமும், மூச்சு திணறலும், இனம் தெரியாத அழுத்தமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டபோது, பி.டி.மரபணு உருவாக்கும் நஞ்சை எதிர்க்கும் ராசாயனங்கள் இரத்தத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே நிலைமை இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே நிர்மல் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் ஏற்பட்டது. அதிக புரதம் தரும் பி.டி. சோயாவை பிரேசில் நாட்டில் உருவாக்கினர். இதனைப் பயன்படுத்தும்போது, வயிற்றுப்போக்கு, அஜீரணம், தோல் அரிப்பு, வலவீனம், தலைவலி போன்ற ஒவ்வாமை உண்டானதால் அவை உடனடியாக திரும்பப் பெறப்பட்டது.
தொடர்ந்து மரபணு மாற்று உணவை உட்கொண்டு வந்தால் சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia) என்ற நோய் உருவாகும். இதனால் சிவப்பு அணுக்கள் வடிம் மாற்றம் அடைந்து, சிறிய ரத்தக் குழாய்களுக்குள் நுழைய முடியவில்லை என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
அமெரிக்காவில், பேராசிரியர் பிரைன் டோக்கர், பி.டி. மரபணு தொழில்நுட்பத்தில் விளைந்த உருளைக் கிழங்குகளை உட்கொண்ட எலிகளுக்கு சிறுகுடல் செல்கள் சிதைந்து போயிருப்பதையும், செரிமான உணவுகளை உறிஞ்சும் உறிஞ்சிகள் அழுகிப் போய் இருப்பதையும் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தார்.
உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் பி.டி. மரபணு பயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக் கேடுகள் மட்டுமின்றி, இயற்கையின் உயிர்ச் சூழல் பண்மை அழிந்து, சுற்றுச் சூழலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.
பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களான, ‘மாஹிகோ’ மற்றும் ‘மோன்சான்டோ’ போன்றவை மரபணு மாற்று விதைகளை உருவாக்கி, அதை உலகம் முமுவதும் விற்பனை செய்து, கொள்ளை லாபம் ஈட்டத் திட்டமிட்டுள்ளன.
அதிக விளைச்சல் தரும் என்று விவசாயிகளிடம் பி.டி.பருத்தியை அறிமுகம் செய்த இந்த நிறுவனங்களின், பி.டி. பருத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விளைச்சல் இன்றி நிலத்தை பாழ்படுத்திவிட்டன.
மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள இந்தியாவில், தற்போது கத்தரி, மக்காச்சோளம், சோயா, எள், தக்காளி, வெண்டை போன்ற மரபணு மாற்றுப் பயிர்களைத் திணித்து பி.டி.விதைகள் விற்பனை சந்தையாக ஆதிக்கம் செலுத்த முனைகின்றன.
மக்கள் நலனுக்கு கேடு செய்யும் ‘மாஹிகோ, மான்சான்டோ’ நிறுவனங்களின் சூழ்ச்சி வலையில் இந்திய அரசு சிக்கிவிடக்கூடாது.
மரபணு மாற்றுப் பயிர்களின் எதிர் விளைவுகள் பற்றிய கருத்துகளை கவனத்தில் கொண்டு, மரபணு மாற்றுப் பயிர்கள் சோதனை முறையில் சாகுபடி செய்வதற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.