

சென்னை: சுரங்கப்பாதை ஏற்படுத்தி தந்தபோதும் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கொரட்டூர் மக்கள் கடந்து செல்கின்றனர். ரயில் நிலையத்தை இணைக்கும் வகையிலான பாதையை விரைந்து ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது கொரட்டூர் பகுதி. புழல், அம்பத்தூர், வில்லிவாக்கம், பாடி ஆகிய பகுதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள இப்பகுதியில் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு போன்றவை புறநகர் பகுதிக்கு ஏற்ப நல்ல முறையில் வளர்ந்துஉள்ளன.
மேலும், ஏரி, சீயாத்தம்மன் கோயில் போன்ற சிறப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறது. இத்தகைய ஊர் மக்களின் போக்குவரத்து தேவையை கொரட்டூர் பேருந்து நிலையம் மற்றும் அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள ரயில் நிலையம் ஆகியவை பூர்த்தி செய்து வருகின்றன. இங்குள்ள ரயில் நிலையம் சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் உள்ளது. இந்த மார்க்கத்தில் நாள்தோறும் 140-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
கொரட்டூரின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், ரயில்வே கேட்டைகடந்துதான், அத்தியாவசிய தேவைகளுக்காக அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர வேண்டும்.இதனால் கடந்த 2013-ல் ரயில்வே கேட்டை நிரந்தரமாக அகற்றி, ரூ.20 கோடி செலவில் சுரங்கப்பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகுமுடிக்கப்பட்டு, கடந்த 2020-ம்ஆண்டு அக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதன் மூலம் அதிகம் விபத்துகள் நிகழ்ந்து வரும் ரெட்டேரிசாலையை விடுத்து, அண்ணாநகர், பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த நேரத்தில் சென்று வாகன ஓட்டிகள் பயன்பெற்று வருகின்றனர்.
அதே நேரம், பாதசாரிகளும் பாதுகாப்பாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதையில் வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும், ரயில்நிலையத்துக்குச் செல்லும் பெரும்பாலானோர் தண்டவாளத்தின் வழியாகவே சென்று வருகின்றனர். இதில்இருக்கும் ஆபத்தை அவர்கள் உணரவில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது. கடந்த 19-ம் தேதி திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த மனோகர், அவரது 2 மகள்கள் என3 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் கிடப்பில் உள்ளசுரங்க நடைபாதை, உயர் மட்ட நடைபாதை மற்றும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரட்டூரை பொறுத்தவரை சுரங்கப்பாதை இருந்தபோதிலும், அதனை பயன்படுத்த பொதுமக்கள் மறுத்து வருகின்றனர். குறிப்பாக ரயில் நிலைய பயணிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்துவதில்லை எனவும், அப்பகுதி வழியே நடந்து செல்லும் வெகுசிலரே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஜி.குமார் கூறியதாவது: சுரங்கப்பாதையின் பராமரிப்பு மோசமாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை பயன்படுத்துவதில்லை. இதுகுறித்து புகார் அளித்ததன்பேரில் அவ்வப்போது தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மழை காலத்தில் நீர் வடிவதற்கான துளைகளும் போடப்பட்டுள்ளன. இரவுநேரத்தில் மின் விளக்குகளும் எரிகின்றன.ஆனாலும், பொதுமக்கள் தண்டவாளத்தின் வாயிலாகவே கடக்கின்றனர். இதில்இருக்கும் ஆபத்து குறித்து போதியவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும், சுரங்கப் பாதை அமைந்திருக்கும்தூரமும் மக்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது.
சுரங்கப் பாதை அமைக்கும்போதே நேரடியாக பயணச்சீட்டு கவுன்ட்டர்களுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த வசதிகளின்றி சுரங்கபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் மாறிச் சென்று, சுமார் 300 மீட்டர் வெளியே நடந்து வந்துமீண்டும் சுரங்கப்பாதையில் ஏறி இறங்க வேண்டியிருப்பதால் முதியவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, இதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "கால்நடைகள் தண்டவாளத்தை நெருங்காத வகையில் சுற்றிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளில் பெரும்பாலானோர் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். அவர்களை பயணச்சீட்டு பரிசோதகர் தொடர்ந்து எச்சரிக்கிறார். மேலும் பயணிகளின் வசதிக்காக நடைமேடை பாலத்தில் ஏறி இறங்க மின்தூக்கி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நேரடி வழிப்பாதை தொடர்பான பயணிகளின் கோரிக்கை குறித்து ஆய்வுசெய்து முடிவு எடுக்கப்படும்" என்றனர். ரயில்வே சட்டம் 147 பிரிவின் கீழ் தண்டவாளத்தை கடப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதைச் செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சுமார் 300 மீட்டர் வெளியே நடந்து வந்து மீண்டும் சுரங்கப் பாதையில் ஏறி இறங்க வேண்டியிருப்பதால் முதியவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.