சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் பழனிசாமி - அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம்

எஸ்.பி. வேலுமணி | கோப்புப் படம்
எஸ்.பி. வேலுமணி | கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை: சிறுபான்மையின மக்களின் பாதுகாவலர் கே.பழனிசாமிதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என, அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி பேசினார்.

கோவை கருமத்தம்பட்டியில் நேற்று நடந்த கிறிஸ்தவ அமைப்பின் முப்பெரும் விழாவில் அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் பல்வேறு வாக்குறுதிகளை தந்தனர்.

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் அம்மா வழியில் பாதுகாவலர் பழனிசாமி தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பல திருச்சபை திறப்புக்கு காரணம் அவர்தான். முதலமைச்சராக இருந்தபோதும் எளிதாக மக்கள் அணுக கூடியவராக செயல்பட்டார். அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று தான் கோவை மாவட்டத்தில் 10 அதிமுக எம்.எல்.ஏ-க்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை பழனிசாமி தந்துள்ளார். மேம்பாலம், அத்திகடவு - அவிநாசி திட்டம், ஆட்சியர் அலுவலகம், புதிய கல்லூரிகள், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனையில் புதிய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல் படுத்தியுள்ளார். இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடத்தப்படும் பல பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினார். தற்போதைய ஆட்சியில் கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். மக்களவை தேர்தலில் பழனிசாமி தலைமையில் பெரிய கூட்டணி அமையும். சட்டப்பேரவை தேர்தல் எப்போது நடந்தாலும் பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களிலும் பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறும். அவர் பொறுப்பேற்ற பின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in