

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்திக்குத் தேவைப்படும் நிலக்கரி மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொள் முதல் செய்யப்படுகிறது.
குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது. தினசரி இந்த சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு கப்பல் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தினசரி 45 ஆயிரம் டன் அளவுக்குத்தான் ஒடிசாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களிலிருந்து தமிழகத்துக்கு அனுப்பப்படுகிறது.
எனவே, தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 72,000 டன் நிலக்கரியை முழுவதுமாக வழங்குமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்குத் தமிழ்நாடு மின்வாரியம் கடிதம் எழுதி உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.