Published : 29 Nov 2023 05:27 AM
Last Updated : 29 Nov 2023 05:27 AM

தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்

ஓசூரில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

ஓசூர்: தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சிக்காக ரூ.6 ஆயிரத்து 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனறு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரயில்வே துறை பணிகள் மற்றும் டாடா தொழிற்சாலையில் ஐ-போன் ஆலை அமையுள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ரயில்வே பணிகளுக்கு 2009-2014-ல் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதாவது 7 மடங்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாமல்பட்டி, ஓசூர் உள்ளிட்ட 75 ரயில் நிலையங்கள் உலகத் தரத்துக்கு இணையாக மாற்றியமைக்கப்பட உள்ளன.

ஓசூர்-ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம், மிக நீளமான சுரங்கப் பாதை அமைப்பதால் ஏற்படும் அதிக செலவு காரணமாக தாமதமானது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்.

2014-ல் ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.2.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 5,200 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெங்களூரு-ஓசூர் இணைப்பு ரயில் பாதையை நான்கு வழிப் பாதையாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, ஓசூர்-ஓமலூர் பாதையை இரு வழிப்பாதையாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓசூரில் பல்முனை ரயில்வே சரக்கு முனையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x