

போக்குவரத்துத் துறை சார்பில் 28.5 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சாலை போக்கு வரத்து நிறுவனத்தின் சார்பில் ரூ.15 கோடியில் கட்டப் படவுள்ள சர்வதேச தரத்துடன் கூடிய ஓட்டுநர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையக் கட்டிடத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத் தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்.
கோவை மண்டலம் அன்னூரில் ரூ.1 கோடியே 50 லட்சம், ஈரோடு மண்டலம் கொடுமுடியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனைகள், திருச்சி மண்டலம் துவரங்குறிச்சி பணிமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள உணவகம், ஊழியர் ஓய்வறை, நாகை மண்டலம் நன்னிலம் பணிமனையில் ரூ.13 லட்சம் செலவிலான ஓய்வறை, பொள்ளாச்சியில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூண்டு கட்டும் கூடுதல் பிரிவு, சென்னை குரோம்பேட்டையில் ரூ.95 லட்சத்து 55 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பேருந்து கூண்டு கட்டும் கூடுதல் பிரிவு, திருநெல்வேலியில் ரூ.98 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மைய அலுவலகம், பண்ருட்டி, செஞ்சி, ஆம்பூர், திருத்துறைப்பூண்டி, லால்குடி ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள ஐந்து பகுதி அலுவலகங்கள் ஆகிய வற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
போக்குவரத்து அலுவலகங் களின் பயன்பாட்டுக்காக ரூ.53 லட்சத்து 3 ஆயிரத்து 913 மதிப்பில் 10 ஜீப்புகளை வழங்கும் அடை யாளமாக 2 மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஜீப்புகளை முதல்வர் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் 28 லட்சத்து 50 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு அளவிலான இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தின்கீழ் 3 பேருக்கு முதல்வர் வழங்கி, இந்தப் பணியை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கு தொழில் நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக ஒரு வருக்கும், பணியின்போது உயிரிழந்த 10 பேரின் வாரிசுதாரர் களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடை யாளமாக ஒருவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். போக்குவரத்துத் துறை சார்பில் முதல்வர் தொடங்கி வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.21 கோடியே 57 லட்சத்து 48 ஆயிரத்து 913 ரூபாய் ஆகும்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத் துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் த.பிரபாகர ராவ், போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது