Published : 29 Nov 2023 06:00 AM
Last Updated : 29 Nov 2023 06:00 AM
சென்னை: சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு நடிகையும், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புஉட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக குஷ்புவின் சமூக வலைதளப் பதிவு சர்ச்சையானது.
இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் கண்டனம் தெரிவித்ததோடு, பட்டியலின மக்கள் மனது புன்பட்டுள்ளதால், குஷ்பு மன்னிப்புகேட்க வேண்டும். இல்லையேல் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக அவரது தலைமையில், 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் குஷ்பு வீட்டருகே நேற்று திரண்டனர். பின்னர் கோஷமிட்டவாறு முற்றுகையிட புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காங்கிரஸாரின் போராட்டத்துக்குப் பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதும் பல விதங்களில் தலித் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. என் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தினால், விளம்பரம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சியாகக் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸை பொருத்தவரை பெண்களுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு மற்றும் மரியாதை கொடுக்கிறார்கள் என்பது இந்த விவகாரத்தில் தெரிகிறது. பெண்களுக்குப் பதவி கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். எனது கருத்துக்கு விளக்கம் அளித்து விட்டேன். எனவே பின் வாங்க மாட்டேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT