Published : 29 Nov 2023 05:50 AM
Last Updated : 29 Nov 2023 05:50 AM
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையைத் தொடர வேண்டும்என ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தன்னைப் பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும் என சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது கே.சி.பழனிசாமி தரப்பில், ``அவதூறு கருத்துக்கான அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது'' என வாதிடப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பில், ``கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாஇருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிசாமியை நீக்கினார். அதன் பின்னர் கட்சி தொடர்பானஅவரது செயல்பாடுகளைத் தடுக்கவே வழக்கு தொடரப்பட்டது. அதில்தெரிவித்த கருத்துகள் அவதூறானவை இல்லை'' என வாதிடப்பட்டது. இதையடுத்து, கட்சியில் இருந்து உறுப்பினர் நீக்கம் தொடர்பான நடைமுறைகளையும், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியை நீக்கியது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.
ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு மற்றும் கே.சி.பழனிசாமிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், ``அவதூறு வழக்கை ரத்துசெய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமென ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT