Published : 29 Nov 2023 06:15 AM
Last Updated : 29 Nov 2023 06:15 AM
சென்னை: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின்.இவர் சென்னை ஐஐடியில் பிஎச்டிபடித்து வந்தார். இவர் மார்ச் 31-ம் தேதி வேளச்சேரியில் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கும், அவரது வழிகாட்டி பேராசிரியருக்கும் நேரடி தொடர் இருப்பதாகத் தெரிவித்து மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைச் சென்னை ஐஐடி அமைத்தது. அதில் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சபிதா, ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கீத்து உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.
இந்தக் குழு மாணவர்கள், பேராசிரியர்களிடம் இருந்து பல்வேறு கருத்துகளை கேட்டுப் பெற்றது. அதன் அடிப்படையில் 700 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை அந்தக் குழுவினர் ஐஐடி இயக்குநர் வீ.காமகோடியிடம் ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்தனர். அதன் பரிந்துரையின்படி பேராசிரியர் ஆசிஷ் குமார் சென் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐஐடி பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, ``விசாரணைக் குழுவின் அறிக்கையில் பேராசிரியர் ஆசிஷ் குமார் சென் மீதான புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், 34 பரிந்துரைகளும் தரப்பட்டிருந்தன. அதில் முக்கியமாகப் பேராசிரியர் சென் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த வாரம் பேராசிரியர் ஆசிஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதவிர பேராசிரியர்கள், மாணவர்கள் இடையே இணக்கமான சூழலைஉருவாக்க வேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகாதவாறு வைப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன'' என்றனர். அதேபோல், சென்னை ஐஐடியில் மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2% பேர் மனஅழுத்தத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் குறைதீர்ப்பாளராக முன்னாள் டிஜிபி திலகவதி நியமிக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT