

சென்னை: டிலைட் பால் அறிமுகப்படுத்தியதின் மூலமாக, எவ்வித மறைமுக விலை ஏற்றம் செய்யப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்களுடன் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: பச்சை நிற பால் பாக்கெட் குறைக்கப்படுவதாக புகார் செய்பவர்கள் முகவர்கள் இல்லை. எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக கொழுப்பு சேர்க்காமல், டிலைட் பாலை மே மாதம் அறிமுகப்படுத்தினோம். தற்போதைய காலத்துக்கு ஏற்ப, இந்த டிலைட் பாலை அறிமுகப்படுத்தி உள்ளோம். சராசரியாக 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பால் வழங்குவதால், அதில் கூடுதல் கொழுப்பு சேர்க்காமல் பசும் பாலை அதே தரத்தில் கொடுக்கிறோம். இந்த பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில், கொழுப்பு எடுத்தல், குறைத்தல் என்பது தவறான வாதம்.
டிலைட் பால் அறிமுகப்படுத்தியதன் மூலம் மறைமுக விலை ஏற்றம் செய்யப்படவில்லை. இன்றைக்கு இருக்கக்கூடிய சந்தை விலையை கருத்தில் கொண்டு 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பாலுக்கான விலையைதான் நிர்ணயம் செய்துள்ளோம். வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில், டிலைட் பால் ரூ.12 முதல் ரூ.16 வரை விலை குறைவுதான். பச்சை நிற பால் பாக்கெட்டில் கூடுதலாக கொழுப்புச் சத்து சேர்க்கும் செலவினங்களை குறைப்பதற்காகவே இந்த டிலைட் பாலை அறிமுக செய்துள்ளதாகக் கூறுவது தவறு. ஆரோக்கியமான பாலை வழங்க வேண்டும் என்ற நோக்கில் டிலைட் பாலை வழங்குகிறோம். ஆவினில் பால் கொள்முதல், விற்பனை குறைந்துவிட்டது என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிலர் உள்நோக்கத்துடன் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.