Published : 29 Nov 2023 06:05 AM
Last Updated : 29 Nov 2023 06:05 AM
சென்னை: இரண்டாம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 1,400 பேரை காசி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பண்டைய இந்தியாவில் கற்றல், கலாச்சார மையங்களாக திகழந்த காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான வாழ்க்கை பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், ''ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்'' என்ற திட்டத்தின்கீழ் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக காசி தமிழ்ச் சங்கமம் டிச.17 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த காசி தமிழ் சங்கமத்தில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்று வர 8 நாட்கள் பயணம் திட்டமிடப்பட்டு இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், மதம் சார்ந்தவர்கள், தொழில் வல்லுநர்கள் என 200 பேர் கொண்ட குழுவினரை 7 குழுக்களாக பிரித்து அனுப்ப உள்ளோம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.8-ம் தேதி கடைசி நாள் ஆகும். 2-ம் கட்ட காசி தமிழ் சங்கமம் திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக சென்னை ஐஐடி இருக்கிறது.
காசியில் உள்ள நமோகாட்டில் தமிழகம், காசியின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. மேலும் கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், தமிழகம் மற்றும் காசியின் சிறப்பு தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட இருக்கின்றன. இதுதவிர இலக்கியம், பண்டைய நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைபொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தக பரிமாற்றங்கள், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பம் போன்ற அறிவுசார்ந்த பல்வேறு அம்சங்களில் கருத்தரங்குகள், விவாதங்கள் நடத்தப்பட உள்ளன என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT