Published : 27 Jan 2018 06:01 PM
Last Updated : 27 Jan 2018 06:01 PM

ஸ்டாலினை முதல்வராக்குவேன்: கருணாநிதியிடம் வாக்குறுதி அளித்ததாக வைகோ பேச்சு

மு.க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என கருணாநிதி காதில் தான் சொன்னதாக வைகோ பொதுக்கூட்டத்தில் பேசினார்.

1993-ம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட வைகோ மு.க.ஸ்டாலினை வாரிசு அரசியல் மூலம் கருணாநிதி கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். இலங்கை பிரச்சினை, 2 ஜி பிரச்சினையில் கடுமையான நிலைப்பாட்டை வைகோ எடுத்தார். குறிப்பாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தார்.

2016 தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வைகோ கடும் விமர்சனங்களை வைத்தார். இந்நிலையில் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சமீபத்தில் அவரைச் சந்தித்து வைகோ நலம் விசாரித்தார். அப்போது மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மேடையில் ஸ்டாலின் முதல்வராகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பேசினார்.

இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சென்னையில் கனிமொழியுடன் பங்கேற்ற வைகோ பேசியதாவது:

''சமீபத்தில் கருணாநிதியைச் சந்தித்தேன், நெகிழ்ந்து போனேன். நான் அவர் காதுபட அருகே போய் சொன்னேன். ஒருகாலத்தில் உங்களுக்கு பக்கபலமாக, நிழலாக எப்படி இருந்தேனோ அதே போல் என் ஆருயிர் சகோதரன் ஸ்டாலினுக்கும் இந்த வைகோ அப்படி இருப்பான் என்று கூறினேன்.

இன்று சூழ்ந்திருக்கிற நெகிழ்வுகளை விடுவித்து அரசோச்சுவதற்கு, முதல்வர் நாற்காலியிலே செயல் தலைவர் அமர்வதற்கு நான் உறுதியாக பக்கபலமாக இருப்பேன், எனக்கு எந்த தன்னலமும், நோக்கமும் இல்லை என்று அவர் காதில் சொன்னேன். நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனார்''.

இவ்வாறு வைகோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x