

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மழவேனிற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான் அலி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி தஸ்லிமா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 2 குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட்ட நிலையில், 3 வயது மகனான ஆதிஸ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். தஸ்லிமா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, தெருவில் சுற்றித்திரிந்த 3 நாய்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த ஆதிஸின் தலையில் கடித்துக் குதறின.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு தஸ்லிமா ஓடிவந்து, நாய்களை விரட்டியடித்தார். பின்னர், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் சிறுவன் ஆதிஸை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனுக்கு தலையில் தையல் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.