

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னையில் கேரள வேர் வாடல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, இலை மடல்களின் ஓரங்கள் கருகி கீழ் நோக்கி வளைந்து காணப்படும். கருகிய பகுதிகள் அதிகமான காற்று அல்லது மழையின் போது உதிர்ந்து விடும். இந்நோயானது இளங்குருத்து பகுதியை தாக்கி, அழுகச் செய்யும். இதனால் குருத்து இலைகளிலும் இலை அழுகல் அறிகுறிகள் தென்படும். இவைத் தவிர பூங்கொத்து கருகுதல் மற்றும் வேர் அழுகுதல் ஆகியவை இவற்றின் முக்கிய அறிகுறிகள்.
எப்படி உருவாகிறது?: இந்த வேர் வாடல் நோய் பைட்டோபிளாஸ்மா எனும் நுண்ணுயிரி மூலம் உண்டாகிறது. கண்ணாடி இறக்கை பூச்சி மற்றும் தத்து பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் மூலம் ஒரு மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு பரவுகிறது. பிற மரங்களுக்கு பரவுதலை தவிர்க்க, அதிக நோயுற்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 250 லிட்டர் தண்ணீரை ஒவ்வொரு மரத்துக்கும் பாய்ச்ச வேண்டும்.
வட்டப் பாத்திகளில் தென்னை மட்டைகளைக் கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். மரத்தை சுற்றி பசுந்தாள் செடிகளை வளர்க்கலாம். தட்டைப்பயறு, சணப்பை, மைமோஸா இன்விசா, கலபகோனியம் மியூகனாய்டஸ், பியுரேரியா பேசிலாய்டெஸ் முதலியவற்றை தென்னையைச் சுற்றி வட்டப்பாத்தியில் ஏப்ரல், மே மாதத்தில் விதைத்து செப்டம்பர், அக்டோபரில் மண்ணுடன் கலந்து உழுதுவிட வேண்டும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 50 கிலோ தொழு உரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும். பாதிப்புள்ள தோப்புகளில் மரம் ஒன்றுக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை கலந்து இட வேண்டும். இலை அழுகல் மற்றும் குருத்தழுகல் அறிகுறிகளை கட்டுப்படுத்த ஒரு மரத்துக்கு 2 மில்லி ஹெக்சாகோனசோல் பூசணக் கொல்லியை 300 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒட்டும் பசை சேர்த்து கலந்து குருத்துப் பகுதியில் 45 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக்கை ஒவ்வொரு மரத்துக்கும் 40 மில்லி என்ற அளவில் 160 மில்லி தண்ணீருடன் கலந்து ஆண்டுக்கு இரு முறை வேர் மூலம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் ‘கோகோகான்’ எனும் நுண்ணுயிர்கள் கலவையை மரத்துக்கு 2 லிட்டர் என்ற அளவில் 8 லிட்டர் நீர் கலந்து வேர்ப் பகுதி நன்கு நனையுமாறு இரண்டு அல்லது 3 மாத இடைவெளியில் தொடர்ந்து ஊற்ற வேண்டும். இம்முறைகளை பின் பற்றி கேரள வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.