Published : 28 Nov 2023 05:42 PM
Last Updated : 28 Nov 2023 05:42 PM

‘மணல் விற்பனை’ விசாரணை: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அமலாக்கத் துறை சம்மனுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில், “அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, நடவடிக்கை எடுக்க முடியாது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா, யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது. மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். சம்மன் அனுப்ப முடியாது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை” என்று வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில், “இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு உதவும் வகையில்தான் வழக்கு தொடர்பான விவரம் கேட்கப்பட்டது. அவை வழங்கப்படவில்லை. ஆதாரங்களை சேகரிப்பதற்கான விசாரணைதான் இது. செயற்பொறியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு யூனிட் மணல் விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.1,900 கிடைக்கிறது. ஆனால் தனியாருக்கோ ரூ.20 ஆயிரம் வரை செல்கிறது. இந்த விவரங்களை சேகரிக்க அதிகாரம் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 28 குவாரிகளில் நடத்திய சோதனையில், 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், ரூ.4,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது” என்று வாதிடப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், “அமலாக்க துறை அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பிய இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை. குற்றம் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அமலாக்க துறை விசாரிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, அமலாக்கத் துறை வாதத்தை ஏற்க முடியாது. குற்றம் மூலம் ஈட்டப்பட்ட தொகையை கண்டறியும் முயற்சியாக அமலாக்கத் துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை” எனக் கூறி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அதேநேரம், விசாரணை நடத்த தடை விதிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு மூன்று வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அமலாக்கத் துறையின் ஆட்சேபனை மனு: இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகி இருந்த அதிகாரி ஒருவர், ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாகிவிட்டார். பின்னர், அமலாக்கத் துறை முன் ஆஜரான அவர், திருவள்ளூர் மாவட்ட நீர்வளத் துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு, வீட்டை விட்டு வெளியேறி செல்போனை அணைத்து வைத்து விடும்படி அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா ஆகியோர் அறிவுறுத்தியதாக கூறினார்.

மேலும், அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி, அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என மறைமுகமாக தெரிவித்ததாகவும், அதையும் மீறி தான் விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன் என்றும் அவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x