

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த நிலையில் கடந்தசில வாரங்களாக பெய்து வரும் மழையால் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட குளங்களில் தண்ணீர் பெருகியுள்ளது. அணைகளில் கடந்த ஆண்டைப் போல் நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் பிசான சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கார் சாகுபடி கேள்வி குறியாகியிருந்தது. போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை என்பதால் பிரதான அணையான பாபநாசம் அணையில் தண்ணீர் பெருகவில்லை. இதனால் ஜூன் முதல் வாரத்தில் கார் சாகுபடிக்காக இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் 96.35 மி.மீ. மழை, நடப்பு நவம்பர் மாதத்தில் 249 மி.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாண்டு அக்டோபர் வரையில் மாவட்டத்தில் மொத்தம் 367.33 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வளமையான மழையளவான 208.20-ஐ விட 19.59 சதவீதம் அதிகமாகும்.
மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளின் மொத்த கொள்ளளவு 12,882 மில்லியன் கன அடி. தற்போது அணைகளில் 5,808.69 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 5,821.60 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. மொத்தமாக அணைகளில் தற்போது 45.09 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 45.19 சதவீதம் தண்ணீர் இருந்தது.
பெருகிய குளங்கள்: மாவட்டம் முழுக்க மழை நீடிப்பதால் குளங்களிலும் நீர் பெருகி வருகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 781 கால்வரத்து குளங்களில் 7 குளங்களில் 3 மாதமும், 27 குளங்களில் 2 மாதமும், 489 குளங்களில் 1 மாதமும் பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் பெருகியுள்ளது. 258 குளங்கள் நீர்பெருகாமல் வறண்டுள்ளன.
இதுபோல் 316 மானாவாரி குளங்களில் 157 குளங்களில் 1 மாதத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 159 குளங்கள் வறண்டுள்ளன. மொத்தமாக 1,097 குளங்களில் 417 குளங்களில் தண்ணீர் பெருகாமல் வறண்டிருக்கின்றன. மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டில் கார் பருவத்தில் 12,305 ஹெக்டேர், பிசான பருவத்தில் 27,891 ஹெக்டேர், கோடை பருவத்தில் 820 ஹெக்டேர் என மொத்தம் 41,016 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த அக்டோபர் வரையில் 4,038 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 10,243 ஹெக்டேரில் நெல் சாகுபடிநடைபெற்றிருந்தது. கடந்த ஆண்டைப்போல் அணைகளில் தற்போது நீர் இருப்பு இருக்கும் நிலையில் விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர்.