

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் தொடர் மழையால் 2 கடைகள் இடிந்து விழுந்தன.
தேவகோட்டை மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாரூக். இவர் ஒத்தக் கடை பேருந்து நிறுத்தம் அருகே டீ கடை நடத்தி வருகிறார். அதையொட்டி ஷேக் அப்துல்லா உணவகம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக தேவகோட்டை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மழை பெய்து வந்த நிலையில் டீ கடை, உணவகத்தை திறக்கவில்லை.
இந்நிலையில் திடீரென 2 கடைகளின் சுவர்களும் இடிந்து விழுந்தன. கடையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. ஆனால் கடைகளில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து சேதமடைந்த கடைகளை வருவாய்த் துறையினர் பார்வையிட்டனர்.