

ஸ்ரீபெரும்புதூர்/ திருவள்ளூர்: மழையால் மீண்டும் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 532 கன அடி மழைநீர் வருவதால், நீர்மட்டம் 22.19 அடியாக உயர்ந்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல், மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அந்தஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 532 கன அடி மழைநீர் வந்து கொண்டிக்கிறது. ஆகவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,170 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம்22.19 அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீர் மற்றும் சிப்காட் தேவைக்காக விநாடிக்கு 107 கன அடியும், உபரி நீர் விநாடிக்கு 25 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்துக்கேற்ப, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில், நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 281 கன அடி மழைநீர் வந்து கொண்டிருப்பதால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 2,788 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 18.89 அடியாகவும் இருக்கிறது.
பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 100 கன அடி மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 1,886 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 30.62 அடியாகவும் உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 174 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே,சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 743 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 16.05 அடியாகவும் இருக்கிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 15 கன அடி மழைநீர் வருவதால், அந்த ஏரியின் நீர் இருப்பு437 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 34.70 அடியாகவும் உள்ளது.