

திருவள்ளூர்: சட்டக்கல்லூரி மாணவ - மாணவிகள் வருங்காலத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற போராட முன்வர வேண்டும் என, பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார். திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நேற்று இந்திய அரசியல் அமைப்பு தினம் மற்றும் கேசவானந்த பாரதி வழக்கின் 50 ஆண்டுகால நினைவை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியில் பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டம், மற்ற நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து வேறுபட்ட மற்றும் தனித்துவம் வாய்ந்ததாகும். இதுநாட்டின் அரசாட்சிக்கு முதுகெலும்பு போன்றது. இந்த அரசியலமைப்பு சட்டமானது இந்தியாவுக்குள் அனைவருக்கும் சம பாதுகாப்பு, வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் உணர்த்துகிறது. இந்த சிறப்பு வாய்ந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அம்பேத்கர் தலைமையிலான குழுவினர் 2 ஆண்டுகள் வரை கடினமாக உழைத்து உருவாக்கினர்.
இதையெல்லாம் சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். அதேபோல், கேசவானந்த பாரதி வழக்கு, சொத்து தொடர்பான வழக்கு மட்டுமல்ல. இந்தியாவின் ஜனநாயகத்துடன் தொடர்புடைய வழக்காகும். மக்களையும், இறையாண்மையையும் காப்பது இந்திய அரசியலமைப்பு சட்டமாகும். மாணவர்கள் வருங்காலத்தில் தைரியமாக ஜனநாயகத்தை காப்பற்ற போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், சட்டக் கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் கயல்விழி, பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.