

மதுரை: மதுரை மாநகராட்சி ஒப்பந்த குடிநீர் லாரிக்கு பதிலாக இரு சக்கர வாகனத்தை கணக்குக் காட்டி ரூ.1 கோடி வரை நூதன முறையில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி மக்களுக்கு குழாய் மூலம் மட்டுமின்றி குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த காசிமாயன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் உள்ள மொத்த மண்டலங்களிலும் குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் ஒப்பந்த லாரிகள், டிராக்டர் எண்ணிக்கை குறித்தும் கடந்த 3 ஆண்டுகளில் மாநகராட்சி சார்பாக எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற தகவலையும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 34 லாரிகள், 33 டிராக்டர்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு லாரிக்கும், டிராக்ட ருக்கும் பல்லாயிரக்கணக்கான நடைகளுக்கு லட்சக் கணக்கில் பணம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இதில் மதுரை மாநகராட்சியின் முதல் மண்டலத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 8 தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் இரு சக்கர வாகன பதிவு எண்ணை (TN 58 AS 1036) லாரியின் பதிவு எண்ணாக மாநகராட்சியில் பதிவு செய்து இல்லாத லாரிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை வாடகை செலுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட அந்த பதிவைக் கொண்ட வாகனத்துக்கு 2020-ல் மொத்தம் 4600 நடைக்கு ரூ.35 லட்சமும், 2021-ல் 6200 நடைக்கு ரூ.48 லட்சமும், 2022-ல்2100 நடைக்கு ரூ.17 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒப்பந்த லாரி நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 லிருந்து 10 முறைதான் நடை செல்ல இயலும். ஆனால் மேற்கண்ட அந்த இருசக்கர வாகனப் பதிவெண் கொண்ட வாகனத்தின் நடை கடந்த 2021-ல் 12 மாதங்களில் மட்டும் 6,200 நடை சென்றுள்ளது. அதாவது மாதத்துக்கு 516 நடையும், நாள் ஒன்றுக்கு 17 நடையும் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-ல் மட்டும் மேற்கண்ட அந்தப் பதிவு எண் கொண்ட வாகனத்துக்கு ரூ.47 லட்சம் மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுவதால் தற்போது முறைகேடு எதுவும் நடக்கவில்லை. லாரியின் பதிவு எண்ணுக்கு (TN14K1036) பதிலாக இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை (TN 58 AS 1036) தவறுதலாக டேட்டா என்ட்ரி பணியாளர்கள் பதிவு செய்து விட்டனர்.
ஆனால், (TN14K1036) பதிவு எண் லாரியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது ஜிபிஎஸ் கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், முறைகேடு எதுவும் நடக்கவில்லை. டேட்டா என்ட்ரி பதிவில் ஏற்பட்ட குளறுபடியே காரணம். இந்தத் தகவலை நாங்கள் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.