

“சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்” - ஸ்டாலின்: “தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின - பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும்” என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சிலை திறப்பு விழாவில் வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜயா சிங், அபய் சிங் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“மாநில உரிமைகளை முதல்வர் காவு கொடுக்கலாமா?”- ராமதாஸ்: "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை இருப்பதாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா? மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதல்வர், சமூக நீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இதனால், தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெங்குவைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை: இபிஎஸ்: டெங்கு காய்ச்சல் பரவலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த, இம்மழைக் காலத்தில் உடனடியாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்த வேண்டும். அதன் மூலம் டெங்கு, ஃப்ளு, டைபாய்ட் போன்ற விஷக் காய்ச்சல்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்திட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் வி.கே.பாண்டியன்: ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
“தெலங்கானாவில் பாஜக வென்றால்...” - பிரதமர் மோடி வாக்குறுதி: தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
‘ரிது பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குவதை நிறுத்துக’: தெலங்கானாவில் ‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க கேசிஆர் அரசுக்கு கொடுத்த அனுமதியை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை திரும்பப் பெற்றுள்ளது.இந்தத் திட்டம் குறித்து ஆளுங்கட்சி அமைச்சர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மீறிப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, ‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா, “பழையக் கட்சியின் கேவலமான அரசியல் வெளிப்பட்டுள்ளது” என்று சாடியுள்ளார்.
டிச.2-ல் கூடுகிறது அனைத்துக் கட்சி கூட்டம்: நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், டிசம்பர் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடுவதற்கு ஒரு நாள் முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும். ஆனால், டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், இம்முறை ஒரு நாள் முன்னதாகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை மீறி தானிய ஏற்றுமதியை செய்யும் உக்ரைன்: கருங்கடல் பகுதியின் வாயிலாக உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக ரஷ்ய அச்சுறுத்தலையும் மீறி உக்ரைன் தானிய ஏற்றுமதியை திறம்பட செய்து வருவது கவனம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த சர்வதேச உணவுப் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றியும், தானியங்கள் ஏற்றுமதியை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் உணவுத் துறை அமைச்சர் எனப் பலரும் விரிவாக விவாதித்துள்ளனர்.
பஞ்சத்தின் விளிம்பில் காசா: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரம் தற்போது பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், அதனால் அங்கு இன்னும் அதிகப்படியான உணவு, நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. உணவு உறுதித் திட்டத்தின் தலைவர் கிண்டி மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.