அச்சுறுத்தும் இருட்டு... படியேற தயங்கும் பாதசாரிகள்... - காற்று வாங்கும் மறைமலை நகர் நடைமேம்பாலம்
மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க நடைமேம்பாலம் இல்லாததால் சாலையை கடக்கும் போது இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலையை கடக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை இருந்தது. இதனையடுத்து சுமார், 1.5 கோடி மதிப்பிலான நடைமேம்பாலத்தை நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தது. இது பொதுமக்களுக்கு ஒரளவு பயனுள்ளதாக இருந்தது. ஆனால், நடைமேம்பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தாததால் இரவு நேரங்களில் பாலத்தின் மேல் செல்போன் வெளிச்சத்தில் தான் மக்கள் நடமாடுகின்றனர்.
மின் விளக்கு இல்லாததால் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறிபோன்ற குற்ற சம்பவங்கள் இந்த பகுதியில் அதிக அளவில் நடைபெறும் என்பதால் பொதுமக்கள் இருளில் நடக்கஅச்சப்படுகின்றனர். மேலும், இந்த படிக்கட்டுகள் மிகவும் உயரமாக உள்ளதால் மின்வசதி செய்து கொடுத்தாலும் கண்டிப்பாக வயதானவர்கள் இந்த படிக்கட்டில் ஏறி சாலையை கடப்பது கடினம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதியோர்களை கருத்தில் கொண்டு நடைமேம்பாலத்தின் இருபுறமும் எஸ்கலேட்டர் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் மு.மெய்யப்பன் கூறியது: பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்படவில்லை. படிக்கட்டுகளில் முதியோர் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் நெடுஞ்சாலை ஆணையமும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து எஸ்கேலேட்டர் வசதியுடன் மறைமலை நகர் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடைமேம்பாலத்தை அமைக்க வேண்டும். மின் விளக்குவசதியுடன் நடைமேம்பாலத்தை கட்டி அமைக்க வேண்டும். திட்டம் செயல்படுவதற்கு முன் ஆய்வு மேற்கொண்டு இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. அதிகாரிகளின் மெத்தன போக்கால்நடை மேம்பாலம் அமைக்கப்பட்டும் பயன்பாடின்றி வீணாக உள்ளது.
சமூக ஆர்வலர் வேலாயுதம்: மறைமலை நகரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். 24 மணி நேரமும் தொழிலாளர்களின் பயணம் இருந்து கொண்டே இருக்கும். ரயில் மூலம் வரும் பயணிகளும், செங்கல்பட்டு பகுதியில் இருந்து வரும் பொதுமக்களும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் தொழிற்சாலைகளுக்கு செல்லவும் வரவும் வேண்டும். அதிவேகமாக நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதால் சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலம் தற்போது ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது. ரயில் நிலையத்துடன் நடைமேம்பாலத்தை இணைத்து மின் விளக்கு, எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.
