Published : 27 Nov 2023 05:37 AM
Last Updated : 27 Nov 2023 05:37 AM
சென்னை: அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைஅறிவித்து சட்டமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மத்திய மற்றும் மாநில தொழிற்சங்கத்தினர் சென்னையில் நேற்று தொடர் போராட்டத்தை தொடங்கினர்.
விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய பாஜக அரசு துரோகம் இழைத்து வருவதாகக் கூறி, அதை கண்டித்தும், 24 கோரிக்கைகளை முன்வைத்தும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்திருந்தது.
அதன்படி, அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்து சட்டமாக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். அனைத்து விளைபொருட்களையும் அரசு கொள்முதல் செய்வதை உத்திரவாதப்படுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்து,பொதுத்துறை வங்கிகள் மூலமாகவிரிவான பயிர் காப்பீடு திட்டத்தைஅமல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள், மத்திய மற்றும் மாநில தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நேற்று தொடங்கினர்.
முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,நேற்று தொடர் போராட்டம் நடத்தினர். தொமுச தலைவர் சண்முகம்தலைமையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இந்த போராட்டத்தில், சிஐடியுஅகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்தியவிவசாயிகள் சங்க (AIKS) பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணன்,சிஐடியு மாநில தலைவர் ஏ.சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) தலைவர் பெ.சண்முகம், பொதுச்செயலாளர் சாமிநடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) பொதுச்செயலாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT