Published : 27 Nov 2023 05:15 AM
Last Updated : 27 Nov 2023 05:15 AM

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் 668 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டதில் 668 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய நல்வாழ்வு குழும நிதி பங்களிப்புடன் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, சமூக நோய்த் தொற்று துறை இணைந்து கடந்த ஆண்டில் தமிழகத்தில் மக்களிடையே காணப்படும் சிறுநீரக பாதிப்பு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கான கள ஆய்வை நடத்தியது.பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் 500 பேர் தமிழகம் முழுவதும் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

சுமார் 4,682 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறையில் பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அதில், இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அனைத்து தரப்புமக்களுக்கும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையில் அறிவதற்கான பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனைக்கு வருவோரின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் புரதம்அதிகமாக உள்ளதா என்பது உடனடியாக சோதனை செய்யப்படும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அடுத்தகட்டமாக யூரியா, கிரியாட்டினின் போன்ற அளவுகள் பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகவியல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். இதன் மூலமாக ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தவிர்க்க முடியும்.

அதன்படி, கடந்த நான்கு மாதங்களில் 23 லட்சத்துக்கும் மேற்பட்டபரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. அதில் 668 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அடுத்த கட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள் ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பரிசோதனைகளை இணைநோயாளிகள், வெயிலில் பணியாற்றும் விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x