

ராமேசுவரம்: மாற்றுத் திறனாளி பெண் விற்க வைத்திருந்த கருவாடுகளை வீசிஎறிந்ததாக, சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நேற்று முன்தினம் வாரச் சந்தை நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் மற்றும் அதிகாரிகள் சந்தையை ஆய்வு செய்தனர். அப்போது, சந்தை நுழைவாயில் அருகே மாரியம்மாள் (50) என்ற மாற்றுத் திறனாளி வைத்திருந்த கருவாட்டுக் கடையை உடனடியாக அகற்றுமாறு, செயல் அலுவலர் சேகர் உத்தரவிட்டார்.
இதற்கு மாரியம்மாள் மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து, மாரியம்மாள் வைத்திருந்த கருவாடுகளை சேகர் தூக்கி எறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
மாற்றுத் திறனாளி பெண்ணிடம் செயல் அலுவலர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக மாற்றுத் திறனாளி சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.இதையடுத்துசெயல் அலுவலர் சேகரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் நேற்று உத்தரவிட்டார்.