

ஆண்டாள் பக்தர்கள் மனம் புண்படும்படி யாரும் கருத்து கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து மதம் என்றால் மட்டும் என்ன கிள்ளுக்கீரையா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய கவிஞர் வைரமுத்து ’தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் பேசினார். அதில் ஆண்டாள் குறித்து வைரமுத்து தவறாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. பலர் வைரமுத்துவுக்கு எதிராக பேசிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்தன.
இந்நிலையில் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "ஆண்டாள் என்பவர் ஒரு கடவுள்.அவரை கோடிக்கணக்கான மக்கள் வணங்கி கொண்டிருக்கின்றனர்.நானே பல தடவை வணங்கியிருக்கிறேன். ஆண்டாள் பக்தர்கள் மனம்
புண்படும்படி யாரும் கருத்து கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே வேறு மதமாக இருந்தால் இப்படி கருத்து கூற முடியுமா? இந்து மதம் என்றால் மட்டும் என்ன
கிள்ளுக்கீரையா? ஆனால் அதற்கு வைரமுத்து மறுப்பு கூறி விட்டதால் இந்த பிரச்சனையை வளர்க்காமல் இதோடு விட்டுவிட வேண்டும்" என்று கூறினார்.