

சென்னை: சென்னையில் கள நிலவரத்தை அறிந்து, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தினமும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார். சென்னையில் விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் மற்றும் நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, நவீன கருவி மூலம் வாகன நெரிசலை கண்காணித்து, தேவைக்கேற்ப போக்குவரத்து மாற்றங்களை செய்து வருகின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, இதுபற்றி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய பணிகளில் போலீஸார் மட்டுமின்றி, போக்குவரத்து வார்டன்கள், தனியார் நிறுவனத்தை சேர்ந்த 600 மார்ஷல்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து, அதை சரிசெய்யவும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெரிசலை குறைக்கும் வகையிலும், தேவையின்றி வாகனங்கள் நிற்காமல் சீரான வேகத்தில் செல்லும் வகையிலும் பல சாலைகளில் புதிதாக ‘U’ வளைவு வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா, இத்தகைய ஏற்பாடுகளை தாண்டி, எங்காவது வாகன நெரிசல் ஏற்படுகிறதா என்று சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் தினமும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்கிறார்.
திடீர் ஆய்வு.. போலீஸாருக்கு தெரியாமல் ஆய்வு செய்யவும், உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளவும் சில நேரங்களில் வாடகை வாகனத்தில் சென்றும், போக்குவரத்தை கண்காணிக்கிறார். அப்போது, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல எவ்வளவு நேரமாகிறது என குறிப்பெடுத்துக் கொள்கிறார். அதன் அடிப்படையில், போக்குவரத்து போலீஸாருக்கு உரிய உத்தரவு களை பிறப்பித்து வருகிறார்.