

கடலூர்/கள்ளக்குறிச்சி/புதுச்சேரி: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கி தொடர்ந்து 2 மணி நேரம் கனமழையாக பெய்தது. இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி நின்றது. கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகர் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் வெளியேற வழியில்லாததால், தேங்கி நின்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை பரவலாக பலத்த மழை பெய்தது. திண்டிவனம், செஞ்சி, காணை, வானூர், மரக்காணம், விக்கிரவாண்டி என விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
பலத்த மழையால், விழுப்புரம் கணேஷ் நகர், கணபதி நகர், ஆசிரியர் நகர், தாமரைகுளம் காலனி குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக விக்கிரவாண்டி அருகே பெரிய தச்சூரில் நேற்று முன்தினம் கூரை சுவர் இடிந்து விழுந்து சக்கரபாணி (80) என்பவர் உயிரிழந்தார். மரக்காணத்தில் நேற்று 2 கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு: மரக்காணம் 71 மி.மீ, விழுப்புரம்,கோலியனூர் தலா 36 மி.மீ, வளவனூர் 42 மி.மீ மழை பெய்தது.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம் ,பண்ருட்டி, முஷ்ணம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர் விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, புவனகிரி, லால்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் ஆறு போல மழைத்தண்ணீர் ஓடியது. தாழ்வான இடங்களில் குட்டை போல மழை தண்ணீர்தேங்கி நின்றது. மாவட்டத்தில் ஆறுகள்,ஏரிகள்,குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. நேற்று காலையும் மழை பெய்தது. இதனால் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற் றைய மழையளவு: சேத்தியாத்தோப்பில் 168.4 மி.மீ, லால்பேட்டையில்110 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 107.1 மி.மீ, புவனகிரியில் 88 மி.மீ, காட்டுமன்னார்கோவிலில் 87 மி.மீ, வேப்பூரில் 85 மி.மீ,கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 77.4 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 76.8 மி.மீ, கடலூரில் 69.5 மி.மீ, குறிஞ் சிப்பாடியில் 66 மி.மீ, சிதம்பரத்தில் 63.1 மி.மீ, விருத்தாசலத்தில் 50.2 மி.மீ,வானமாதேவியில் 30.6 மி.மீ, பண்ருட்டி யில் 16 மி.மீ மழை பெய்தது.
புதுச்சேரி: புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான இடங்கள், வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 27) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் டிச. 1-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்ன லுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடியகனமழை பெய்தது. இதனால் ரெயின்போநகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோல் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களிலும் கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்கள், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 6.93 செ.மீ. மழைபதிவாகியுள்ளது. கனமழை காரணமாக உருளையன்பேட்டையில் நேற்று அதிகாலை பெரிய மரம் ஒன்று சாலை யில் விழுந்தது. தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். கிராமப் புறங்களிலும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவையும் அகற்றப்பட்டன.