

அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சலக ஏடிஎம்-ல் மர்ம நபர் ஒருவர் ‘ஸ்கிம்மர்’ கருவியைப் பொருத்தி லட்சக்கணக்கில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அஞ்சல் துறை ‘இந்தியா போஸ்ட் பேமேண்ட் பாங்க்’ என்ற பெயரில் வங்கி சேவையை அளித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான அஞ்சலக வங்கி ஏடிஎம் கிளைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் 97 அஞ்சலக ஏடிஎம்கள் உள்ளன. அதில் 21 ஏடிஎம்கள் சென்னையில் உள்ளன.
அஞ்சல் வங்கி சேவையைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் ஏடிஎம் வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சலக ஏடிஎம்-ல் கடந்த 13-ம் தேதி மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவியைப் பொருத்தி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடியுள்ளார்.
அதைக் கொண்டு போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்த அந்த மர்ம நபர் பெங்களூரு சென்று அங்குள்ள ஏடிஎம்களின் மூலம் லட்சக்கணக்கான பணத்தைத் திருடிய சம்பவம் அஞ்சல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தலைமை அஞ்சலகத்தில் பணி புரியும் 10 அஞ்சல் ஊழியர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடு போயுள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களுடைய கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்த குறுஞ்செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக தலைமை அஞ்சலகத்தில் வந்து புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஏடிஎம்-ல் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அஞ்சல் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “அஞ்சலக ஏடிஎம் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம்-ல் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் மர்ம நபரின் முகம் பதிவாகி உள்ளது. அதன் மூலம் கொள்ளையடித்த நபர் விரைவில் பிடிப்பட்டு விடுவார் என நம்புகிறோம்” என்று கூறினர்.
சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, “பழைய குற்றவாளி ஒருவர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சி மூலம் அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து இருக்கிறோம். அவரை பிடிக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்” என்றனர்.
ஸ்கிம்மர் என்பது சுண்டுவிரல் அளவுள்ள கார்டு ரீடர் கருவி ஆகும். இந்தக் கருவியை ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை உள்ளிடும் பகுதியில் பொருத்திவிடுவார்கள். ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை உள்ளிடும்போது இந்தக் கருவியைக் கடந்த பின்னரே கார்டு இயந்திரத்துக்குள் செல்லும். அப்போது கார்டு எண் உட்பட அனைத்து தகவல்களையும் ஸ்கிம்மர் கருவி பதிவு செய்து வைத்துக்கொள்ளும். ரகசிய குறியீட்டு எண்ணை அறிவதற்காக ஏடிஎம் இயந்திரத்தின் நம்பர் போர்டு இருக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் ஸ்டிக்கர் வடிவிலான கண்காணிப்புக் கேமராவை ஒட்டிவிடுவார்கள்.
ஸ்கிம்மர் கருவியில் உள்ள கார்டு தகவல்கள், கேமராவில் பதிவாகியிருக்கும் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து, வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் கொள்ளையடித்து விடுவார்கள். ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை உள்ளிடும் பகுதியில் வழக்கத்துக்கு மாறான வகையில் ஏதேனும் இருக்கிறதா என்று அவ்வப்போது கண்காணிப்பது நல்லது.