

பழனி, மங்களூர் உள்ளிட்ட சில விரைவு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றங் கள் செய்யப்பட்டுள்ளதால், திரு வள்ளூர் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
கணினி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உறுதிப் படுத்தப்பட்ட (Confirm) மற்றும் காத்திருப்பு (Waiting List) முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தக் காத்திருப்பு முறையில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் மூன்று வகைகள் உள்ளன. அதாவது, பொது காத்திருப்பு (General Waiting List), தொலை இட காத்திருப்பு (Remote Location Waiting List) மற்றும் குடை ஒதுக்கீடு காத்திருப்பு (Pooled Quota) ஆகிய பிரிவுகளின் கீழ் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
பொது காத்திருப்பு முறையில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில், யாராவது ஒருவர் தனது முன்பதிவை ரத்து செய்தால், அதற்கு அடுத்தபடியாக காத்தி ருப்பு பட்டியலில் உள்ளவர் களின் டிக்கெட்டுகள் தானாக உறுதியாகிவிடும். முன்பெல் லாம், அனைத்து ரயில்களிலும் இதுபோன்ற பொது காத்திருப்பு முறையில்தான் உறுதிப்படுத் தப்படாத டிக்கெட்டுகள் வழங்கப் பட்டு வந்தன.
தற்போது விரைவு ரயில்களில் குடை ஒதுக்கீடு காத்திருப்பு முறையில் டிக்கெட்டுகள் வழங்கப் படுகின்றன. இதனால், பெரும் பாலான ரயில்களில் அந்த ரயில் கிளம்பும் ஸ்டேஷனை தவிர இடையில் உள்ள ஸ்டேஷன்களில் ஏறும் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை.
சென்னை சென்ட்ரலில் இருந்து பழனி செல்லும் விரைவு ரயிலில் சென்னை முதல் காட்பாடி வரை டிக்கெட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூல ஒதுக்கீடு (Source Quota) மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திடீரென இந்த முறை மாற்றப்பட்டு குடை ஒதுக்கீடு முறையின் கீழ் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால், பயணிகளுக்கு உறுதிப் படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் பாஸ்கரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் மங்களூர் மெயில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் ஆகியவற் றுக்கு சென்னை முதல் காட்பாடி வரை ஒரே ஒதுக்கீட்டின் அடிப் படையில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப் பட்டு வந்தன. உதாரணமாக, மங்களூர் மெயிலில் பயணி ஒருவர் சென்னையில் இருந்து மங்களூர் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அவருக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் இருந்து மங்களூருக்கு ஒரு பயணி டிக்கெட் முன்பதிவு செய்தால், அடுத்தடுத்த இருக்கை எண்கள் வழங்கப்படும். அதற்கு அடுத்ததாக அரக்கோணத்தில் இருந்து ஒரு பயணி டிக்கெட் எடுத்தால் அவருக்கு அதற்கு அடுத்த இருக்கை எண் ஒதுக்கப்படும்.
ஆனால், தற்போது திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்கள் குடை ஒதுக்கீடு முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், இந்த ரயில் நிலையங்களுக்கு குறைந்த அளவே சீட்டுகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பதில்லை. மாறாக, காத்திருப்பு டிக்கெட்தான் கிடைக்கி றது. மேலும், திருவள்ளூர் ரயில் நிலைய கோட்டாவில் உறுதிப்படுத் தப்பட்ட டிக்கெட் எடுத்த பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே, அந்த ரயில் நிலைய கோட்டாவில் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணியின் டிக்கெட் உறுதி செய்யப்படும். மாறாக, சென்னையில் ஒரு பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் காத்திருப்பு பட்டிய லில் உள்ள பயணியின் டிக்கெட் உறுதியாவதில்லை.
இதற்காக, திருவள்ளூர் மற்றும் அரக்கோணத்தில் ரயில் ஏறும் பயணிகள் தங்கள் ஊர்களில் இருந்து டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக சென்னையில் இருந்து முன்பதிவு செய்கின்றனர். இதனால், அவர்கள் டிக்கெட்டிற்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே, இந்த புதிய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து, பழைய முறையில் டிக்கெட் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், இப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப் பட்ட ஊர்களில் இருந்து பயணி கள் கோரிக்கை மனுக்களை அனுப்பினால் பரிசீலிக்கப்படும்’’ என்றார்.