Published : 27 Nov 2023 06:05 AM
Last Updated : 27 Nov 2023 06:05 AM

கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் வருகையை கண்காணிக்க ‘பயோமெட்ரிக்’ முறை: மாநில பதிவாளர் சுப்பையன் தகவல்

அரக்கோணத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க தானிய கிடங்கை மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரக்கோணம்: மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் வருகையை கண்காணிக்க விரைவில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியில் மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வங்கியில் உள்ள வைப்பு தொகை, கடன்கள், கடன் வசூல் வீதம் மற்றும் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சுவால்பேட்டையில் கட்டப்பட உள்ள வங்கியின்கிளை, அரக் கோணம் வட்டம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தானிய கிடங்கு மற்றும் அலுவலகத்தையும் பார்வையிட்டார்.

இதையடுத்து, செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, "தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளன. விரைவில் இப்பணிகள் முடிந்து வாக்காளர் பட்டியல் தயாராகி விடும். மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் வருகை விவரங்களை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரக்கோணம் வட்டம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தானிய கிடங்கு பகுதியில் சங்கத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு கூட்டுறவுத்துறை மூலம் பெட்ரோல் பங்க், திருமண மண்டம் அமைத்து சங்கத்துக்கு வருவாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் தேர்வு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் சேர கூட்டுறவு பயிற்சியை முடித்திருக்க வேண்டும். அஞ்சல் மூலமாக இந்த பயிற்சியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இ்ந்த பயிற்சியில் தேர்வு பெற்றவர்கள், பயிற்சியில் உள்ளவர்கள், படித்து முடித்து தேர்வுக்காக காத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த பணிக்கு விண் ணப்பிக்கலாம்" என்றார். இந்த ஆய்வின்போது, துணைப்பதிவாளர் (நிர்வாகம்) சிவமணி, இணைப்பதிவாளர் சிவக்குமார், அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் கருணா கரன், மேலாளர்கள் அருணா, மேலாண்மை இயக்குநர் (அரக் கோணம்) பூபாலன், பொது மேலாளர் பன்னீர் செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x