Published : 25 Jan 2018 08:30 AM
Last Updated : 25 Jan 2018 08:30 AM

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மூடவேண்டிய நிலையில் துணைத் தூதரகங்கள்: செலவுகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம்

ஜிஎஸ்டி எனும் மூன்று எழுத்து தந்திரம் பொதுமக்களை, வியாபாரிகளை மட்டும் பாதிக்கவில்லை. சென்னையில் உள்ள சுமார் ஒரு டஜன் வெளிநாட்டு துணைத் தூதரகங்களைக் கூட இழுத்துமூட வேண்டிய நிலைமைக்குத் தள்ளிவிட்டது.

சர்வதேச ஒப்பந்தங்களின் உதவியுடன் வெளிநாடுகளில் பணிபுரியும் தூதர்கள், துணைத் தூதர்கள், தூதரக அதிகாரிகளுக்கு அவர்களின் பணி காலத்தில், எந்த ஒரு வெளிநாட்டு அரசும் எந்தவித வரியையும் விதிக்காது. இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

அமெரிக்காவில் அயல்நாட்டு தூதரக அதிகாரிகள் தங்கள் ஐ.டி. கார்டை காட்டினால், நிறுவனங்கள் வரியைத் தள்ளுபடி செய்து பொருட்களைக் கொடுத்துவிடுவார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வரியைப் பிடித்து, உடனே தள்ளுபடி செய்து திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இந்தியாவில் வரியை பிடித்து, பிறகு மத்திய மாநில அரசுகள் ஆமை வேகத்தில் அதைத் திருப்பித் தருவது வழக்கமான நடைமுறை. அந்தந்த நிதி ஆண்டுக்குள் திரும்ப வந்தால் போதும் என்று தூதரக அதிகாரிகளும் பெரியதாக கண்டு கொள்வதே இல்லை.

ஜிஎஸ்டி கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு, எல்லாம் தலைகீழ். இந்த சட்டம் அமலில் வந்த பிறகு, ஆறு மாதமாக துணைத் தூதரகங்களுக்கு வரியைத் திரும்பப் பெற உதவும் ஜிஎஸ்டி சர்டிஃபிகேட் இன்னமும் வழங்கப்படவில்லை. இதனால், சுமார் ஒரு டஜன் துணைத் தூதரகங்கள் எவ்வித செலவையும் செய்ய முடியாமல் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றது.

அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், ‘‘தற்சமயம் புதுடில்லியில் உள்ள தலைமை தூதரகங்களுக்குத் தரப்பட்ட ஜிஎஸ்டி சர்டிஃபிகேட் எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதனால் எங்கள் கணக்குகளை சரிவர முடிக்க முடியாது. ஒவ்வொரு தூதரகமும் மற்றும் துணைத் தூதரகங்களும் தனித்தனியாக கணக்குகளை வைத்துள்ளன’’ என்று அங்கலாய்த்தார் அயல்நாட்டு தூதரக அதிகாரி ஒருவர்.

ஒவ்வொரு தூதரகமும் ஆண்டுதோறும் பழைய கார்களை விற்று, புதிய கார்களை வாங்குவது வழக்கம். ஜிஎஸ்டி வரியினால் சொகுசு கார் களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. கட்டிய வரியைத் திரும்பப் பெற சர்டிஃபிகேட் இல்லாததால் பல லட்சம் ரூபாய்களை வரி செலுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், பழைய வாகனங்களையே உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ரஷ்ய துணைத் தூதரகம் 30 ஏர்கண்டிஷன் சாதனங்களை இந்த ஆண்டு மாற்றுவதற்கு தீர்மானித்தது. சர்டிஃபிகேட் வழங்கப்படாத நிலையில் வாங்குவதைத் தள்ளிப் போட்டிருக்கிறது.

‘‘எங்கள் நாட்டு உயரதிகாரிகள் வரும்போது நட்சத்திர ஓட்டல்களில்தான் தங்கவைப்போம். அங்கே முன்பு எங்களுக்கு வரிவிலக்கு உண்டு. இப்போது, கட்டிய வரியைத் திரும்பப் பெற சர்டிஃபிகேட் வழங்கப்படாததால் லட்சக்கணக்கில் நஷ்டம். . மதுபானங்கள், உணவு வகைகள், அலுவலக உபகரணங்கள் என்று எதற்கும் இப்போது வரிவிலக்குப் பெற முடியாத நிலைமை உள்ளது’’ என்று வருத்தப்பட்டார் ரஷ்ய துணைத் தூதரக உயரதிகாரி ஒருவர்.

கொண்டாட்டம் மறந்தது

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒரு துணைத் தூதரகம் கிறிஸ்துமஸ் பார்ட்டியை வெகுவிமரிசையாக ஆண்டுதோறும் நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவது வழக்கம். சென்னையின் முக்கிய பிரமுகர்கள் சுமார் 500 பேர் அழைக்கப்பட்டு மதுவிருந்து, கலை நிகழ்ச்சி என்று அமர்க்களம் செய்யும். இந்த ஆண்டு திரும்ப வராத ஜிஎஸ்டி வரி, சுமார் 8 லட்சம் என்று கணக்கிடப்பட்டதால் விழாவே நடக்கவில்லை. தூதரகத்துக்குள்ளே சிறிய அளவில் பார்டியை வைத்து முடித்துக்கொண்டனர்.

‘‘துணைத் தூதரகங்களுக்கு எங்கள் நாட்டு அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலவினங்களுக்காக அனுமதி செய்யும். அதன்படியே நாங்கள் செலவுகளை முடிவு செய்வோம்.

இப்போது குறிப்பிட்ட சில சதவீதம் ஜிஎஸ்டி வரியாக செலுத்த வேண்டியிருப்பதால், மற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம்’’ என்றார் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரி ஒருவர்.

‘‘டெல்லியில் உள்ள தூதரகங்களின் எண்ணைப் பயன்படுத்தினால், உங்களுக்கு வரி திரும்ப வராது. அவர்களுக்குத்தான் அது போகும். இதனால், அநாவசியமான குழப்பம்தான். எங்கள் அலுவலகக் கட்டிடத்தை ரூ.2 கோடி செலவில் புதுப்பிக்க திட்டமிட்டிருந்தோம். கட்டிய வரி திரும்ப கிடைக்க வாய்ப்பு இல்லாததால் அதுவும் கைவிடப்பட்டது” என்றார் துணைத் தூதர் ஒருவர்.

‘‘ரூ.50 லட்சம் செலவில் பி.எம். டபிள்யூ கார் வாங்குவதும், லட்ச ரூபாய் செலவில் மாத வாடகைத் தருவதும் சிக்கலாகி வருகிறது. வழக்கமான செலவுகளைத் தவிர, வேறு எதுவும் செய்ய முடியவில்லை’’ என்கிறார்கள் அயல் நாட்டு தூதரக அதிகாரிகள். சென்னையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜெர்மனி, மலேசியா, இலங்கை, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் துணைத் தூதரகங்கள் இயங்குகின்றன. இவை, விசா வழங்குவது முதல் கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் என பல வகைகளில் இந்தியாவுக்கான இணைப்புப் பாலமாகச் செயல்படுகின்றன என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x