

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுரேஷின் உடல், அவரது சொந்த ஊரான பண்டாரசெட்டிப்பட்டி மயானத்தில், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, சுரேஷின் உடலுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், காவல் கண்காணிப்பாளர் கங்காதர் ஆகியோர், சுரேஷின் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகேயுள்ள பண்டார செட்டிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை சுரேஷின் குடும்பத்தாரிடம் அமைச்சர் வழங்கி ஆறுதல் கூறினார்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்:
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுரேஷ் வீர மரணம் அடைந்தார். இதனால் அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் ஆர்.எஸ்.புரா பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோது, எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஏ.சுரேஷ் வீர மரணமடைந்தார். இவர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஜானகி (32). இவர்களுக்கு புன்னகை(13) என்கிற மகளும், ஆதர்ஷ் (7) என்கிற மகனும் உள்ளனர். தாயார் சாலம்மாள் (60), தந்தை அய்யாசாமி (70). அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ் (45) உள்ளிட்டோர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
எல்லை பாதுகாப்புப் படையில் 78-வது பட்டாலியனில் சுரேஷ் பணிபுரிந்து வந்தார். அவர் வீர மரணம் அடைந்த சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் சுரேஷின் வீட்டில் குழுமி அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நாட்டுக்காக சுரேஷ் தனது உயிரை தியாகம் செய்துள்ளதை எண்ணி அங்கு திரண்டிருந்த கிராம மக்கள் கண்ணீர் விட்டனர்.
அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.