

திருவள்ளூர்: வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, மின்சார ரயில்கள் வரும் போது பொது மக்களை எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் ரயில் வழித் தடத்தில் உள்ள பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது வேப்பம் பட்டு ரயில் நிலையம். நாள் தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தும் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, இந்த ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்ல வசதி கிடையாது. அதே போல், ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள கடவுப் பாதையை கடந்து செல்ல மேம்பாலமும், சுரங்கப் பாதையும் இல்லை.
இதனால், பொது மக்கள், பயணிகள் மிகவும் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர். குறிப்பாக, ரயில் நிலைய கடவுப் பாதையில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பின்னர், நிலம் கையகப்படுத்து வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, பாலம் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மேம்பால பணி: இந்நிலையில், கடந்த வாரம் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பாதியில் நிற்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வேப்பம் பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதற்கு வசதியாக ரயில்வே நிர்வாகம் புதிய ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, வேப்பம்பட்டு ரயில் நிலைத்தில் மின்சார ரயில்கள் வரும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பப் படுகிறது. இதற்காக, ஒலிபெருக்கி நிறுவப்பட்டுள்ளது. மேலும், ரயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தைக் கடக்காமல் தடுப்பதற்காக ரயில்வே போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.