Published : 26 Nov 2023 04:08 AM
Last Updated : 26 Nov 2023 04:08 AM

பரங்கிமலையில் ரூ.500 கோடி நிலம் மீட்பு: வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

பரங்கிமலை: பரங்கிமலையில் ரூ.500 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன.

பரங்கிமலை பட்ரோடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தை, சிலர் குத்தகைக்கு எடுத்தனர். குத்தகை காலம் முடிந்த பின்னரும் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல் அரசுக்கு சொந்தமான இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்து உள்ளனர். அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். வீட்டில் இருந்தவர்களை வெளியேற சொல்லி அங்கிருந்த சுற்றுச்சுவர் மற்றும் பழைய கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றினர். மேலும் கட்டிடங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னர் வீட்டு கட்டிடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 500 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் அந்த இடத்தில் இயங்கி வந்த வங்கி, தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு சீல் வைக்காமல் 7 நாள் கால அவகாசம் தரப்பட்டது.

பரங்கி மலை பட்ரோட்டில் இதுவரை குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.2,500 கோடி மதிப்பில் உள்ள நிலங்கள் மீட்கப் பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை புறநகர் பகுதியில் அரசு நிலத்தில் குத்தகை காலம் முடிந்தும் நிலத்தை ஒப்படைக்காமல் உள்ள இடங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x