Published : 26 Nov 2023 04:00 AM
Last Updated : 26 Nov 2023 04:00 AM
சென்னை: தவறான அர்த்தத்தில் ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தாத போது ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர்ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டு, குஷ்புவை அவதூறாக ஒருவர் எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்தபோது, உங்களைப் போன்று சேரி மொழியில் என்னால் பேச முடியாது என குஷ்பு தெரிவித்திருந்தார். இதில் சேரி என்ற வார்த்தையை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையானது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: என் வீட்டை முற்றுகையிடப் போவதாக சிலர் கூறினார்கள். யாரும் வர வில்லை. நான் தவறான அர்த்தத்தில் சேரி என்ற வார்த்தையை கூறவில்லை. அது முற்றிலும் பகடியாக பதிவிட்டிருந்தேன். அதற்கு பிரஞ்சு மொழியில் ‘அன்புக் குரிய’ என்று அர்த்தம். அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் என்னால் எதுவும் செய்ய முடியாது.
அந்த பதிவில் திமுக-வைச் சேர்ந்த ஒருவர் என்னை பார்த்து மிகவும் அவதூறாக பேசி, பிறகு பதிவை நீக்கி இருக்கிறார். ஒரு பெண்ணை பார்த்து இப்படி பேசுவதா என காங்கிரஸ் கேள்வி கேட்கவில்லையே. மேலும், திமுகவைசேர்ந்தவருக்கு தான் பதிலளித்தி ருந்தேன். இதில் ஏன் காங்கிரஸ் கட்சியினர் தலையிட்டனர்? திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் காங்கிரஸா அல்லது திமுகவுக்காக வேலை பார்க்கிறார்களா?
குடியரசுத் தலைவராகும் போது திரவுபதி முர்முவை தீய சக்தி என கூறியது காங்கிரஸ். ஆட்சியில் இருந்த போது அம்பேத்கருக்கு பாரத ரத்னா அளிக்காதது ஏன்? நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்காக நீதிமன்ற வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அதை கேள்வி கேட்டதா காங்கிரஸ்? தமிழகத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதை அவர்கள் ஏன் எதிர்க்கவில்லை? தவறான அர்த்தத்தில் பேசாத போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?
அரசு பதிவேடுகளில் கூட சேரி என்ற வார்த்தை உள்ளது. வேளச்சேரி, செம்மஞ்சேரி போன்றவற்றில் உள்ள சேரி என்ற வார்த்தை இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்டு நான் பேசவில்லை. பட்டியலின மக்கள் நம்முடன் சமமாக வாழும் தகுதி இல்லாதவர்களா? அவர்கள் வாழும் பகுதியை சேரிஎன்று ஏன் சொல்கின்றனர்? குறிப்பிட்ட இடத்தில் வாழ்வோர் தாழ்த்தப்பட்டோர் என கூறுவதை நான் விரும்பவில்லை.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தொடர்பாக 450-க்கும் மேற்பட்ட புகார்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு வந்துள்ளன. இதில் எத்தனை பேருக்கு ஆதரவாக காங்கிரஸ், வி.சி.க குரல் கொடுத்துள்ளன? வேங்கை வயல் விவகாரத்தில் முதல்வரிடம் கேள்வி கேட்டனரா?
வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். மணிப்பூரில் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். புகார் வந்தால் மட்டுமே மகளிர் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். நான் இதுவரை பதிவு செய்த எந்த ட்விட்டையும் நீக்கியதே இல்லை. பிரதமரை நான் திட்டிய பதிவை கூட நீக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT