Published : 26 Nov 2023 04:00 AM
Last Updated : 26 Nov 2023 04:00 AM

சென்னை, புறநகரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பாதிப்பு

புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது.

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை திடீர் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகரில் 89 இடங்களில் மழை நீர் தேங்கியது. மாநகராட்சியின் துரித நடவடிக்கையால் நேற்று மாலையே பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது.

சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வந்தது. இரவும் மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் காலை நேரத்தில் திடீரென கன மழை கொட்டத் தொடங்கியது. இதனால் சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுமுறை அறிவித்தார். கனமழை காரணமாக ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலை,

புரசைவாக்கம் டாக்டர் அழகப்பாக சாலை, மயிலாப்பூர் சிவசாமி சாலை, அண்ணா மேம்பாலம் அருகில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், எழும்பூர் பாந்தியன் சாலை உள்ளிட்ட 89 இடங்களில் மழை நீர் தேங்கியது. அப்பகுதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு மாநகராட்சி பணியாளர்கள் நீர் இறைக்கும் மோட்டார்களை கொண்டு வந்து, தேங்கிய மழை நீரை வெளியேற்றினர். இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

அடையாறில் 8 செ.மீ. மழை: நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக அடையாறில் 8 செ.மீ., தரமணியில் 7 செ.மீ., அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், தேனாம்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ.,

நந்தனம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, பள்ளிகரணை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., ராயபுரம், முகலிவாக்கம், மதுர வாயல், வளசரவாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய இடங்களில் தலா2 செ.மீ., கொளத்தூர், சோழிங்க நல்லூர், மணலி, கொரட்டூர் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவானது. மாநகராட்சியின் துரித நடவடிக்கையால் நேற்று மாலைக்குள் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது | 23 ஆயிரம் பணியாளர்கள்: பருவ மழைக்காலம் என்பதால் சுழற்சி முறையில் 23 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலையில் திடீர் கன மழை பெய்தாலும், 260 நீர் இறைக்கும் மோட்டார்களை மாநகரில் பல்வேறு இடங்களில் தயார் நிலையில் வைத்திருப்பதால், உடனுக் குடன் நீரை அகற்றிவிட்டோம். 5 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கியது. அவை அனைத்தும் போக்குவரத்து பாதிக்காத அளவுக்கே இருந்தது. அவற்றிலும் தற்போது நீர் வடிந்துவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x