Last Updated : 26 Nov, 2023 04:18 AM

1  

Published : 26 Nov 2023 04:18 AM
Last Updated : 26 Nov 2023 04:18 AM

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” - விழுப்புரம் மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பே..!

திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் உள்ள சமத்துவ புரத்தில அப்போதைய ஆட்சியர் மோகன் குறைகளை கேட்டறிகிறார். ( கோப்பு படம்)

விழுப்புரம்: ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த ஊர்களுக்குச் சென்று கள ஆய்வில் ஈடுபட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முன்னோடியாக நமது விழுப்புரம் மாவட்டம் இருந்து வந்துள்ளது. கடந்த 1997-98-ம் ஆண்டுகளில் விழுப்புரம் ஆட்சியராக பதவி வகித்த அதுல்ய மிஸ்ரா, “மக்களை நோக்கித்தான் அரசாங்கம் செல்ல வேண்டும்; அதற்காக, நான் மக்களை நோக்கி பயணிக்கப் போகிறேன்” என்று அறிவித்தார். இதை அப்போது, ‘மக்களை நோக்கி மாவட்ட நிர்வாகம்’ என குறிப்பிட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

மாதத்தில் சுமார்12 நாட்கள் கிராமங்களில் நடந்து சென்று மக்களை சந்திப்பது, அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பது. இரவாகி விட்டால் அங்கேயே ஒருவர் வீட்டில் தங்கி அடுத்த கிராமத்துக்கு செல்வது என திட்டமிட்டு அப்போதைய விழுப்புரம் ஆட்சியர் இதை செயல் படுத்தினார். அதன் பிறகு பல்வேறு நிர்வாகச் சிக்கல்களால் இத்திட்டம் செயல்படுத்த முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி விழுப்புரம் ஆட்சியராக பொறுப் பேற்றுக் கொண்ட மோகன் ( தற்போது, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ) மறு நாளே, விழுப்புரம் நகரில் காலையில் நடை பயிற்சி செய்து கொண்டே ஆய்வு மேற்கொண்டார்.

‘வித்தியாசமான செயல்பாடாக இருக்கிறதே!’ என்று அப்போதைய ஆட்சியரிடம் இது பற்றி கேட்டதற்கு, “இப்படிச் செல்வதன் மூலம் மக்களின் நடப்புத் தேவைகளை அறிய முடிகிறது” என்று கூறி, வாரத்தில் 6 நாட்களில் காலை 6.45 மணி முதல் 8 மணி வரை இந்த நடை பயிற்சி ஆய்வை மேற்கொண்டார்.

விழுப்புரம், திண்டிவனம் இரண்டு நகராட்சிகளிலும் தலா 3 நாட்கள் நடை பயிற்சி சென்று, மக்களின் தேவைகளை அறிந்து, நடவடிக்கை எடுத்தார். அப்போது பேசிய ஆட்சியர், “இதற்கு முன் விழுப்புரத்தில் இருந்த ஆட்சியராக இருந்த அதுல்ய மிஸ்ரா சார், மக்களை நேரடியாக சென்று சந்தித்து நடவடிக்கை எடுத்த தகவல் எனக்கு மேலும் ஊக்க மளிக்கிறது” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தை, 25 ஆண்டுகளுக்கு முன்பே விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தொடங்கி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் அதனை நடைமுறைபடுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆக்கப் பூர்வமான திட்டங்களை அரசு கொண்டு வருவதும், அதை பெயரளவுக்கு செயல்படுத்தாமல் செவ்வனே செய்வதும், நல்ல நிர்வாகத்துக்கு மேலும் அழகு சேர்க்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x