Published : 26 Nov 2023 04:16 AM
Last Updated : 26 Nov 2023 04:16 AM

திருப்புவனம் வைகை ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீர் - 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பால் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆற்றின் குறுக்கே பாலப்பணி தாமதத்தால், கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

வைகை ஆற்றின் தென் பகுதியில் மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச்சாலை செல்கிறது. ஆற்றின் வடபகுதியில் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த கே.பெத்தானேந்தல், மணல்மேடு, கணக்கன்குடி, கருங்குளம், வெங்கட்டி, சடங்கி, பாப்பாகுடி உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது அனைத்து தேவைகளுக்கும் ஆற்றை கடந்து, மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச்சாலை வழியாக திருப்புவனம் மற்றும் மதுரை சென்று வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கு காலங்களில், ஆற்றைக் கடக்க முடியாமல் மாணவர் கள், பொதுமக்கள் 2 கி.மீ. தொலைவி லுள்ள திருப்புவனத்துக்குச் செல்ல 10 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளாக போராடி வந்தனர். அதன்படி, கடந்தாண்டு ஜூலை 26-ம் தேதி லாடனேந்தல், பெத்தானேந்தல் இடையே நெடுஞ்சாலைத் துறை ( நபார்டு கிராமச் சாலைகள் ) சார்பில் ரூ.17.78 கோடி செலவில் பாலம் அமைக்க அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

இதற்கான பணி வரும் டிச.8-ம் தேதியுடன் முடிவடைய வேண்டும். ஆனால் இன்னும் முடிவடையாததால், தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி கிராமங்கள் திருப்புவனத்தி லிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் கிராம மக்கள் பல கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மணல்மேடு வழக்கறிஞர் ராஜா கூறியதாவது: கால நிர்ணயப்படி பாலப்பணி இன்னும் 2 வாரங்களில் முடிவடைய வேண்டும். ஆனால், இன்னும் 30 சதவீத பணி கூட முடிவடையாததால், ஆற்றில் தண்ணீர் செல்லும் சமயங்களில் சிரமப்படுகிறோம். இதே வேகத்தில் பாலப்பணி நடைபெற்றால், இன்னும் 2 ஆண்டுகள் ஆனாலும் முடிவடையாது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பாலப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x