

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெறக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை முழுமையாகக் குறைக்கக்கோரி, சென்னை கொளத்தூரில், இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக தனது எம்.எல்.ஏ., அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதேபோல், சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், அவருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்.. சாலை மறியல்:
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த சனிக்கிழமை (ஜன.27-ம் தேதி) திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டங்களை தூண்டி விடுவோம் எனக் கூறியிருந்தார்"
இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், பொறுப்புள்ள தலைவர் போராட்டங்களைத் தூண்டிவிடுவேன் எனக் கூறலாமா? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், திமுக சாலை மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.